தினமும் ஒரு திருக்குறள்
தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உள்ளன. இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளுக்குள் வருகின்றன.
அதிகாரம் 19 – புறங்கூறாமை
9.05.2025
குறள் 181: அறங்கூறா னல்ல செயினும் ஒருவன் புறங்கூறா னென்றல் இனிது
விளக்கம்: ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.
அதிகாரம் 18 – வெஃகாமை
8.05.2025
குறள் 180: இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும் வேண்டாமை யென்னுஞ் செருக்கு
விளக்கம்: விளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.
6.05.2025
குறள் 178: அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்
விளக்கம்: ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.
5.05.2025
குறள் 177: வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன்
விளக்கம்: பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.
4.05.2025
குறள் 176: அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்
விளக்கம்: அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.
3.05.2025
குறள் 175: அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின்
விளக்கம்: யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?
2.05.2025
குறள் 174: இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்
விளக்கம்: ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்.
1.05.2025
குறள் 173: சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர்
விளக்கம்: அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.
30.04.2025
குறள் 172: படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர்
விளக்கம்: நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.
29.04.2025
குறள் 171: நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்
விளக்கம்: நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.
About Us
IMTC was founded to create a greater awareness of Tamil history and rich Tamil cultural by organising the cultural events and promoting Tamil language. IMTC has proved that it possesses the necessary knowledge, experience and vision to promote the Tamil culture in India, Sri Lanka and abroad.
Get in Touch
- Organisation registration number 12673950